தென்காசி மாவட்டத்தில் இடைகால் என்ற இடத்தில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில், ராஜபாளையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே சமயம் எதிர்த் திசையில் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இரு பேருந்துகளும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஆகியோர் மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதன்படி பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக சுமார் 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us