தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே உள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் 38 வயதான ரவி. இவர், தூத்துக்குடி டவுன் மூன்றாம் மைல் மடத்தூர் ரோட்டில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களாக பூசாரியாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மேரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பூசாரி ரவி, இதற்கு முன்பு ஆத்தூர், ஏரல், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் பூசாரியாகப் பணிபுரிந்துள்ளார்.
இதனிடையே, ஏரல் ராஜபதி கிராமத்தைச் சேர்ந்தவர் டெய்லர் முத்துராமலிங்கம். இவருடைய மனைவி முத்து விஜயாவுக்கு 36 வயது. இவர், ஏரல் பகுதியில் உள்ள கோயிலுக்கு வந்து செல்லும்போது, பூசாரி ரவிக்கும் முத்து விஜயாவுக்கும் இடையே பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. நாளடைவில், இந்த விவகாரம் முத்து விஜயாவின் கணவருக்குத் தெரியவந்ததால், குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் இந்த உறவால் பிரச்சினை வளர்ந்ததால், கணவர் முத்துராமலிங்கம், விஜயாவை விட்டுப் பிரிந்து, தனது மூத்த மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையில், முத்து விஜயா தனது இரண்டு மகள்களுடன் பூசாரி ரவியுடன் சேர்ந்து, சண்முகபுரம் பகுதியில் வீடு எடுத்து குடும்பமாக வாழ்ந்து வந்தார். அதே நேரம், பூசாரி ரவிக்கும் முத்து விஜயாவுக்கும் உள்ள தொடர்பை அறிந்த பூசாரியின் மனைவி மேரி, தனது இரண்டு குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில், சோட்டையன்தோப்பு மெயின் ரோட்டில் உள்ள பாஸ்ட் புட் கடையில் பூசாரி ரவி சில்லி சிக்கன் வாங்குவதற்காக வந்தார். ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தபோது, திடீரென டூவீலரில் வந்த இரண்டு இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பூசாரி ரவியை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தக் கோரத் தாக்குதலில், பூசாரி ரவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான காவல்துறையினர், பூசாரி ரவியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், முத்து விஜயாவின் 17 வயது மகனான, சாயர்புரத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர், உறவினர் பால்பாண்டி என்பவருடன் சேர்ந்து இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
பூசாரி ரவி, தன்னுடைய தாய் முத்து விஜயா மற்றும் சகோதரிகளைத் தங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்துவிட்டார் என்ற ஆத்திரத்தில், கல்லூரி மாணவர் வெறியுடன் இருந்து வந்தார். இதனால், தன்னுடைய தாயை ஏமாற்றி, குடும்பத்தை நாசப்படுத்திய பூசாரி ரவியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். இதற்காகப் பூசாரியைப் பல நாட்களாக நோட்டமிட்ட கல்லூரி மாணவர், சம்பவத்தன்று உறவினர் பால்பாண்டியுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, 17 வயது இளைஞரான இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் மற்றும் அவரது உறவினர், 26 வயதான பால்பாண்டி என்ற போஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தகாத உறவு விவகாரத்தில், கோயில் பூசாரியைக் கிடா வெட்டுவதுபோல், பாஸ்ட் புட் கடை முன்பு வெட்டிச் சாய்த்த சம்பவம், தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி