தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிநாதர் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வார் அவதார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
இந்நிலையில், திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் ஆழ்வார் திருநகரி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோயில் செயல் அலுவலர் சதீஷ் அந்தப் பகுதிக்குச் சென்றார். அந்த இடம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலுக்கு சொந்தமானது என அவர் தெரிவித்தார். அதைப் பொருட்படுத்தாத தனி நபர்களும் அவர்களது கூட்டாளிகளும் கட்டடப் பணியைத் தொடர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செயல் அலுவலர் சதீஷ், கட்டுமானப் பணிகள் நடந்த இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயில் இடத்தில் கட்டடங்கள் எதுவும் கட்டக்கூடாது என எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டடப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. பின்னர் ஆக்கிரமிக்க முயன்றவர்களும் கட்டடப் பணியாளர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்துக்குச் சென்ற செயல் அலுவலர் சதீஷ், கோயில் இடத்தைத் தனி நபர்கள் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார். தற்போது அந்தப் பகுதியில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயில் நிலத்தைப் பாதுகாக்க ஒற்றை ஆளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரியான கோயில் செயல் அலுவலர் சதீஷுக்கு ஆழ்வார்திருநகரி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோயில் நிலங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆழ்வார்திருநகரி பொதுமக்களும் ஆன்மிக அன்பர்களும் எச்சரித்துள்ளனர்.
Follow Us