தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான ஸ்ரீகாந்த் ரெட்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்தில் லாலாப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வந்தார். தன்ராஜுக்கு அதிகளவு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. அதன் காரணமாக, சில நாட்களில் அலுவலகத்திற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
அந்த வகையில், 20 நாட்களுக்கு முன்பு தன்ராஜ் அலுவலகத்திற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த ஸ்ரீகாந்த், தன்ராஜை அழைத்து கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், “இனி நீ வேலைக்கு வர வேண்டாம்; அலுவலகத்தை விட்டு வெளியே போ” என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, தன்ராஜ் மறுநாள் முதல் ஸ்ரீகாந்தின் அலுவலகத்திற்கு வந்து, “என்னைத் திரும்ப வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். ஸ்ரீகாந்த் மறுப்பு தெரிவித்தபோதிலும், தன்ராஜ் தொடர்ந்து வந்து வேலைக்குக் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.
இந்த செப்டம்பர் 12-ம் தேதி, தன்ராஜ் தனது நண்பர் டேனியலுடன் மீண்டும் ஸ்ரீகாந்தின் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஸ்ரீகாந்திடம் ஏதோ காரணத்தைச் சொல்லி ரூ.1,200 பணம் வாங்கிச் சென்றுள்ளார். அந்தப் பணத்தில் நேராக மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி, தன்ராஜும் அவரது நண்பர் டேனியலும் குடித்துள்ளனர். பின்னர், அதீத போதையில் மீண்டும் தனது நண்பருடன் அலுவலகம் வந்திருந்த தன்ராஜ், ஸ்ரீகாந்திடம், “என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்; எந்தத் தவறும் செய்யமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
போதை தலைக்கேறிய தன்ராஜை சமாளிக்க முடியாமல், “திங்கள் அன்று வா... ஏதாவது இருந்தால் அப்போது பேசிக்கொள்ளலாம். இப்போது வெளியே போ” என்று ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார். ஆனால், இதனால் கடும் கோபத்துடன் தன்ராஜும் அவரது நண்பர் டேனியலும் அங்கிருந்து வெளியே சென்றிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்தின் மீது ஆத்திரத்தில் இருந்த தன்ராஜும் டேனியலும் வீட்டிற்குச் செல்லாமல், அலுவலகம் இருக்கும் தெருவிலேயே சுற்றி வந்துள்ளனர். பின்னர், மாலை நேரத்தில் ஸ்ரீகாந்த் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, அவரை இருவரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், மௌலாலி எச்.பி. காலனி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீகாந்தை மறித்த இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தியுள்ளனர். கத்தி வளைந்த காரணத்தினால், இரத்தக் கறையுடன் இருக்கும் கத்தியைக் கையால் நேராக்கி, மீண்டும் இரக்கமின்றி ஸ்ரீகாந்தைக் குத்தியுள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் நோக்கி கற்களை வீசியபோது, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருவரும் அங்கிருந்து அமைதியாக நடந்து சென்றிருக்கின்றனர். உடனடியாக போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ரீகாந்துக்கு சிபிஆர் செய்தும், பலனின்றி அங்கேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தன்ராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் டேனியலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.