தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி, பெற்றோரை அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்து, அந்தத் தொகையை அவர்களின் பெற்றோருக்கு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisment

குரூப்-II தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, அவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கி, பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பல தியாகங்களைச் செய்கின்றனர். அவர்களை அலட்சியப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

Advertisment

அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், அவர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அரசு ஊழியர்களைப் போல் அவர்களின் பெற்றோரும் மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள். இந்தச் சட்டம் தண்டனையாக அல்ல, மாறாக பெற்றோரின் தியாகங்களுக்கு நீதி வழங்கும் முயற்சியாக இருக்கும்,” என்றார். மேலும், இந்த சட்ட மசோதாவைத் தயார் செய்ய, முதன்மைச் செயலர் ராமகிருஷ்ண ராவ் தலைமையில் அதிகாரிகள் குழு அமைத்து, சட்ட வரைவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.