இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் கிட்டத்தட்ட 20 முதல் 30 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்தம் வாக்காளர்களில் சுமார் 65 லட்சம் பேர். அதாவது சுமார் 8.5% வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதெல்லாம், இவ்வளவு பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வளவு பேர் இறந்துவிட்டனர், இவ்வளவு பேர் போலி பெயர்களை வைத்திருந்தனர் என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கிய பட்டியலில், அவர்கள் புத்திசாலித்தனமாக எந்த வாக்காளரின் முகவரியையும், வாக்குச்சாவடி எண்ணையும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் கொடுக்கவில்லை. இதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?.
தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும், பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெற முடியவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு கேலியான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் தொடர் எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.