பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறார்கள். இந்த திருத்தத்தின் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட பெயர்களில் இறந்ததாகக் கூறப்படும் 18 லட்சம் வாக்காளர்கள், பிற தொகுதிகளுக்குச் சென்ற 26 லட்சம் பேர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட 7 லட்சம் பேர் அடங்குவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 தேதியன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேஜஸ்வி யாதவ், “ஆளும் பா.ஜ.கவிடம் இருந்து உத்தரவுகளைப் பெற்று தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் தேர்தல் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசாங்கத்தை நடத்த விரும்பினால் அவர்களுக்கு ஒரு நீட்டிப்பு கொடுங்கள். முழு நடவடிக்கையும் நேர்மையற்றதாக இருக்கும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் என்ன பயன் இருக்கிறது?” என்று கூறினார். சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “புறக்கணிப்பு என்பது ஒரு மாற்று வழி தான், ஆனால் நாங்கள் அதை பற்றி சிந்திப்போம். இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு நாங்கள் எங்களுடைய கூட்டணிக் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்து ஆலோசிப்போம்” என்று கூறினார்.