பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி மற்றும் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ஆகியோர் தனித்து கூட்டணி அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், நேற்று (28-10-25) தனது கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மகாகத்பந்தன் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அந்த தேர்தல் வாக்குறுதியில், கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் (திருத்த) சட்டம் பீகாரில் அனுமதிக்கப்படாது என்றும் அரசாங்கத்தை அமைத்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும், வெளிமாநில ஊழியர்களும் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும் மை-பெஹின் மான் யோஜனாவின் கீழ், டிசம்பர் மாதம் தொடங்கி பெண்கள் மாதத்திற்கு ரூ.2,500 நிதி உதவி பெறுவார்கள் என்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தின் கீழ், கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,002 ஓய்வூதியம் வழங்கப்படும், இது ஆண்டுதோறும் ரூ.2,200 அதிகரிக்கப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக்கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய தேஜஸ்வி யாதவ், “என் உயிரைக் கொடுத்தாலும் கூட ஒவ்வொரு வாக்குறுதியையும் நான் நிறைவேற்றுவேன். நாங்கள் பீகாரை கட்டியெழுப்ப வேலை செய்கிறோம், அதே நேரத்தில் எங்கள் போட்டியாளர்கள் அதைக் கைப்பற்ற வேலை செய்கிறார்கள். என் மாமா நிதிஷ் குமார் மீது எனக்கு அனுதாபம் உண்டு. பாஜகவும் சில ஊழல் அதிகாரிகளும் அவரை ஒரு பொம்மையாக மாற்றியுள்ளனர். அவர்கள் வாக்குகளைப் பெற அவரது முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/tejmani-2025-10-29-11-46-17.jpg)