கட்சியில் இருந்து நீக்கிய லாலு பிரசாத்; சுயேட்சையாக போட்டியிட தேஜ் பிரதாப் யாதவ் முடிவு!

lalutej

Tej Pratap Yadav decides to contest as an independent for Lalu Prasad expelled from the party

பீகார் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும், எம்.எல்.ஏ, எம்.பி ஆகிய பதவிகளிலும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர். தற்போது அவர், ஹசன்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். தேஜ் பிரதாப் யாதவுக்கு, பீகாரின் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தி ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். அதில், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஐஸ்வர்யா குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் குறித்து ஐஸ்வர்யாவின் தந்தையும், முன்னாள் அமைச்சருமான சந்திரிகா ராய் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவதாகத் தெரிவித்தார். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மே மாதம் சமூக வலைத்தளப் பக்கமாக ஃபேஸ்புக்கில் தனக்கும், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நீண்ட கால உறவு குறித்து தேஜ் பிரதாப் யாதவ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த பதிவு வெளியான அடுத்த நாளிலேயே, 6 ஆண்டுகளுக்கு தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்தும், குடும்ப உறவுகளிலிருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இருப்பினும், தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார். இந்தாண்டு இறுதியில் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேஜ் பிரதாப் யாதவ் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து விலக்கியிருப்பது பீகார் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், மஹுவா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தேஜ் பிரதாப் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய தேஜ் பிரதாப் யாதவ், “நாங்கள் மஹுவா தொகுதியில் போட்டியிடுவோம்.  இந்த முறை நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார். யாருடைய அரசாங்கம் அமைந்தாலும் அவர்கள் இளைஞர்கள், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் பற்றி பேசினால் அவர்களுடன் நாங்கள் முழு பலத்துடன் அவர்களுடன் இருப்போம். நான் பயப்படப்போவதில்லை. எனது கட்சியைச் சேர்ந்த சிலர் என்னை வெளியேற்ற சதி செய்தனர். அந்த 4,5 பேரின் பெயர்களை வெளியிடுவேன். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் உள்ள சிலரால் நான் எப்படி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பதை பீகார் மக்கள் பார்த்திருக்கிறார்கள். நான் பொதுமக்களிடம் சென்று நீதி கேட்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

Bihar LALU PRASAD YADAV Tej Pratap Yadav
இதையும் படியுங்கள்
Subscribe