பீகார் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆவார். இவர் கடந்த 1990 முதல் 1997 ஆம் ஆண்டு வரை பீகாரின் முதலமைச்சராகவும், எம்.எல்.ஏ, எம்.பி ஆகிய பதவிகளிலும் பொறுப்பு வகித்துள்ளார். காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் தேஜ் பிரதாப் யாதவ், பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சராகவும் பதிவி வகித்தவர். தற்போது அவர், ஹசன்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். தேஜ் பிரதாப் யாதவுக்கு, பீகாரின் முன்னாள் முதல்வர் தரோகா ராயின் பேத்தி ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். அதில், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஐஸ்வர்யா குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் குறித்து ஐஸ்வர்யாவின் தந்தையும், முன்னாள் அமைச்சருமான சந்திரிகா ராய் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவதாகத் தெரிவித்தார். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மே மாதம் சமூக வலைத்தளப் பக்கமாக ஃபேஸ்புக்கில் தனக்கும், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நீண்ட கால உறவு குறித்து தேஜ் பிரதாப் யாதவ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இருவரும் 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த பதிவு வெளியான அடுத்த நாளிலேயே, தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்தும், குடும்ப உறவுகளிலிருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இது குறித்து லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ‘தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற நடத்தை எங்கள் குடும்ப மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே, மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக, நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறமை கொண்டவர். அவருடன் உறவு கொள்ள விரும்புவோர் தங்கள் சொந்த விருப்பப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இருப்பினும், தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தார். இந்தாண்டு இறுதியில் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேஜ் பிரதாப் யாதவ் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்து விலக்கியிருப்பது பீகார் மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த விவகாரம் பேசுபொருளாக மாறிய ஒரு மாதத்திற்கு பிறகு, தேஜ் பிரதாப் யாதவ், நேற்று (30-06-25) தனது தோழி அனுஷ்கா யாதவை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். பாட்னாவில் உள்ள அனுஷ்கா யாதவ்வின் வீட்டிலிருந்து வெளியே வந்த தேஜ் பிரதாப் யாதவ் அங்கிருந்த செய்தியாளர்களிடம், “நான் எல்லோரையும் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னை யாராலும் தடுக்க முடியாது. எங்களுக்குள் குடும்ப உறவுகள் உள்ளன, விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன” என்று கூறி உடனடியாக காரில் ஏறி அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.