isro Photograph: (space)
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (12-01-26) பிஎஸ்எல்வி சி62 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மேற்கொள்ளும் இந்த ஏவுதலுக்கான 22.5 மணி நேர கவுண்ட்டவுனை இஸ்ரோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. கவுண்ட்டவுன் நேற்று மதியம் 12.48 மணிக்குத் தொடங்கியது. அதன் கால அளவு 22 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது 2026-ஆம் ஆண்டின் இஸ்ரோவின் முதல் விண்வெளிப் பயணமாகும்.
இந்நிலையில் இன்று காலையில் ஏவப்பட்ட, பிஎஸ்எல்வி-சி62/EOS-N1 திட்டத்தின் கீழ், ராக்கெட் முதலில் தாய்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை நிலைநிறுத்தும். அதனைத் தொடர்ந்து, ஏவப்பட்ட சுமார் 17 நிமிடங்களுக்குப் பிறகு மற்ற 13 துணை செயற்கைக்கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த துணை செயற்கைக்கோள்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மே 18, 2025 அன்று ஏவப்பட்ட PSLV-C61/EOS-09 ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக முழுமையாக நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-1, மங்கள்யான் (செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம்) மற்றும் ஆதித்யா-எல்1 உட்பட பிஎஸ்எல்வி இதுவரை 63 பயணங்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
Follow Us