கல்லூரி மாணவியை மிரட்டி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அவர்களது நண்பர் ஒருவரும் பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக நரேந்திரா என்பவரும் உயிரியல் ஆசிரியராக சந்தீப் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும், அனூப் என்ற நபர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில், ஆசிரியர் நரேந்திரா கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரிடம் படிப்பு தொடர்பான குறிப்புகளை வழங்குவதாகச் சொல்லி செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். அதன் பின்னர், அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், அனூப்பின் அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று நரேந்திரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது வெளியே சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியுள்ளார். இதில் பயந்து போன அந்த மாணவி, இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, சந்தீப் அந்த மாணவியைச் சந்தித்துப் பேசியுள்ளார். நரேந்திராவுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மாணவியை மிரட்டி அனூப் இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த மாணவியை சந்தீப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன் பின்னர், நரேந்திரா மற்றும் சந்தீப் ஆகியோருடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அந்த மாணவியை மிரட்டி அனூப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல சந்தர்ப்பங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் அந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு மாதத்திற்குப் பிறகு தைரியத்தை வரவழைத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர், கர்நாடகா மாநில பெண்கள் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர், காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அனூப் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.