அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திக் கடந்த 8ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, தற்போதைய தொகுப்பூதியமான ரூ.12,500இல் இருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் நேற்றைய போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று (13.01.2026) பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர். இதனையடுத்து பகுதி நேர ஆசிரியர்களை அங்கிருந்த காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வாகனம் மூலம் வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

Advertisment

அச்சமயத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் என்பவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அப்போது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

siren-police

அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி இன்று (14.02.2026) பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியர் கண்ணனின் உயிரிழப்பு சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மற்றொருபுறம் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2 ஆயிரத்து 500 உயர்த்தி மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisment