அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைக்குள் பசுவின் மூளையை கொண்டு வந்த சம்பவம் தெலுங்கானாவின் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் பெண்கள் உயர்நிலைப் பள்ளி எனும் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக காசிம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அறிவியல் செயல் விளக்கத்தின் ஒரு பகுதியாக மனித மூளை குறித்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காசிம் பாடம் நடத்தி வந்துள்ளார்.
அப்போது மனித மூளை எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்கு பசுவின் மூளையை வகுப்பறைக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், அந்த மூளையுடன் புகைப்படம் எடுத்து அதனை பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சில மாணவர்கள் கடும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பள்ளியின் மற்ற ஆசிரியர்கள், அந்த புகைப்படத்தை நீக்கும்படி காசிமிடம் கூறியுள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது.
அதனை தொடர்ந்து, ஆசிரியரை உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தனர். அதன்படி, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வகுப்பறைக்குள் பசுவின் மூளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் காசிம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.