திருச்சி மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் முழு போதையில் நிற்கக்கூட முடியாமல் மல்லாந்து படுத்து கிடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள வையமலை பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆரோக்கியராஜ் (45). தலை நிற்காத போதையில் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மல்லாக்க படுத்துக் கிடந்தார். அங்கு வந்த பொதுமக்கள் போதையில் கிடந்த ஆசிரியர் மீது தண்ணீரை ஊற்றித் தெளிய வைக்க முயன்றனர். மேலும் அவருக்கு குடிக்க தண்ணீரை கொடுத்து இப்படியெல்லாம் செய்வது நியாயமா? என கேள்வி எழுப்பினர்.

''எங்க ஸ்கூல் வாத்தியாருடைய நிலைமை பாருங்க. நல்லா பாத்துக்கோங்க. இது உங்களுக்கே நல்லா இருக்கா?  பாடம் எடுக்கின்ற ஒரு டீச்சர் ட்ரிங் பண்ணிட்டு இப்படி வந்து இருக்கீங்களே. இதைப் பார்த்து மற்ற பிள்ளைகள் கற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்'' என பெண்கள் அவரிடம் கேள்விஎழுப்பும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆரோக்கியராஜை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.