19 வயது ஆசிரியை கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

Advertisment

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயதான மனிஷா. இவர் அந்த பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி மனிஷா தனது பள்ளியில் இருந்து அருகில் உள்ள நர்சிங் கல்லூரிக்கு மேற்படிப்பு பற்றி விசாரிக்கச் சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் மனிஷா வீடு திரும்பாததால், அவரது தொலைப்பேசி எண்ணுக்கு மனிஷாவின் தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளார். எந்த அழைப்புக்கும் மனிஷா பதிலளிக்காததால், சந்தேகமடைந்த அவரது தந்தை லோஹாரு போலீசில் காணாமல் போனதாகப் புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகாரை ஏற்க மறுத்த போலீஸ், அவர் ஓடிப்போய்விட்டார் என்றும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவார் என்று அலட்சியகாமக் கூறியதாகக் கூறப்படுகிறது . இதற்கிடையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி சிங்கானி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதனை கண்ட விவசாயி உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் மனிஷா என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, மனிஷாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் உடலை ஏற்க மறுத்து இந்த கொடூரமான குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். மேலும், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மனிஷாவின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராமவாசிகள் நேற்று நீதி கோரி டெல்லி- பிலானின் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்ய். இதனிடையே, அலட்சியமாக நடந்த கொண்ட போலீசாரை இடை நீக்கம் செய்ய ஹரியானா முதல்வர் முதல்வர் நயாப் சிங் சைனி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.