தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்துள்ள வி. புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் விளாத்திகுளம் சிதம்பர நகரைச் சேர்ந்த 35 வயதான தியாகராஜன் என்பவர் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
பிளஸ் 2 வேளாண்மைப் பிரிவில் பயிலும் 26 மாணவ-மாணவிகள் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் புதூர் அருகேயுள்ள சென்னமரெட்டிபட்டி மற்றும் மெட்டில்பட்டி கிராமங்களுக்கு கள ஆய்வுப் பயிற்சிக்காக விவசாய நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவ-மாணவிகளை ஆறு பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது மாணவிகளுடன் சென்ற ஆசிரியர் தியாகராஜன் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தார். ஒரு மாணவியிடம் தனது 2 வயது குழந்தையை மடியில் அமர வைத்து தொட்டு அத்துமீறியதோடு, அவள் அணிந்திருந்த மோதிரத்தைத் தனக்கு மாட்டிவிடுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தன் தோழிகளிடம் சம்பவத்தைக் கூறி அழுதார். அப்போது பிற மாணவிகளும் தங்களுக்கும் இதேபோன்று ஆசிரியர் தியாகராஜனிடமிருந்து பாலியல் சீண்டல் இருந்ததாகத் தெரிவித்தனர். பள்ளிக்குத் திரும்பிய பிறகு வகுப்பாசிரியரிடமும் பின்னர் தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லெட் இடமும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் தலைமையாசிரியர் “இதைப் பெரிதுபடுத்தாதீர்கள்... பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும்... போங்கள், போங்கள்...” என்று அலட்சியமாகப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சம்பவத்தைத் தெரிவித்து, சைல்டு ஹெல்ப்லைன் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா உள்ளிட்ட போலீசார் பள்ளிக்கு விரைந்து மாணவிகளைத் தனித்தனியே விசாரித்தனர். விசாரணையில் சம்பவம் உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளிலும், புகாரை அலட்சியப்படுத்திய தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லெட் மீது இரண்டு பிரிவுகளிலும் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் தியாகராஜன் தலைமறைவானார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தியாகராஜனையும், புகாரை அலட்சியப்படுத்திய தலைமையாசிரியர் அன்னை ஷீபா பிளவர் லெட்டையும் பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் கள ஆய்வுக்கு மாணவிகளை அழைத்துச் சென்று ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி
Follow Us