விழுப்புரம் நகரில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், விழுப்புரம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் விழுப்புரம் அருகே முகையூரைச் சேர்ந்த 48 வயதான பால் வில்சன் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், 6-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவி, கடந்த சில நாட்களாக பள்ளிக்குச் செல்வதில் ஆர்வமின்றி இருந்துள்ளார். முதலில் பெற்றோர் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டபோது, எதுவும் கூறாமல் இருந்த அந்த மாணவி, பின்னர் பெற்றோரின் தொடர் விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார்.

பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பால் வில்சன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறிய மாணவி, ஆசிரியர் கண்ட இடத்துல தொட்றாரும்மா, வலி தாங்க முடியல....’ என்று கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். எனினும், தலைமையாசிரியர் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று, மாணவியின் பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் பள்ளிக்குச் சென்று, பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் பால் வில்சனை வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கினர். மேலும், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கோபமடைந்த பெற்றோரைச் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அங்கு கூடியிருந்த மற்ற மாணவிகளின் பெற்றோரும் ஒன்றிணைந்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், பால் வில்சனை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளிக்குச் சென்று, சக ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் கூறியவற்றை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, ஆசிரியர் பால் வில்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவிகளின் பெற்றோர், “ஆசிரியர்கள் மாணவிகளுக்கு நற்பண்புகளை கற்பிக்க வேண்டும். இந்தப் பள்ளி மிகச் சிறந்தது என்றாலும், இந்த ஆசிரியர் மட்டும் தவறாக நடந்து கொண்டார். பால் வில்சன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.