நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்தவர், 50 வயதான செந்தில்குமார். அறிவியல் ஆசிரியரான இவர், பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றியவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஊட்டி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு பணி மாற்றம் பெற்று, அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், செந்தில்குமார் பணிபுரியும் அரசுப் பள்ளியில், பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த காவல்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, மாணவர்-மாணவிகள் முன்னிலையில், குட் டச்.... பேட் டச் குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். மாணவர்கள் இதனை உன்னிப்பாகக் கவனித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தொடக்கூடாத பகுதிகளைத் தொட்டு பாலியல் தொல்லை அளித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, செந்தில்குமார் பல மாணவிகளின் மார்பு, உடலின் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளைத் தொட்டு பாலியல் தொல்லை அளித்ததும், சில சமயங்களில் மாணவிகளுக்கு முத்தமிட்டதும் தெரியவந்தது. இவ்வாறு, அவர் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உயர் அதிகாரிகளுக்கும் குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில், ஊட்டி ஊரக காவல் நிலைய ஆய்வாளர் விஜயா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, செந்தில்குமாரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போக்சோ (POCSO) சட்டம், குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமாகும். ஆசிரியர்கள், மாணவர்களை தங்கள் குழந்தைகளைப் போலக் கருதி பாதுகாக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.