விழுப்புரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் நகரப் பகுதியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேருக்கு ஆங்கில பாடம் எடுத்து வந்த இடைநிலை ஆசிரியரான பால் வின்சன்ட் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். உடனடியாக குழந்தைகள் நல அமைப்பிற்கு தலைமை ஆசிரியர் தகவலளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அந்த பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்க முன்றனர். அதேநேரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பால் வின்சென்டை கைது செய்துள்ளனர்.