சிதம்பரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவில் ஜிஎஸ்டி வரிக் குறைப்பு மாபெரும் புரட்சி என்று மோடியும், நிர்மலா சீதாராமனும் கூறியுள்ளனர். இந்த 8 ஆண்டுகளில், 4 விதமான மிக உயர்ந்த வரி விகிதத்தை அறிவித்து, ரூ.55 லட்சம் கோடியை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளனர். பாஜக ஆட்சியில்தான் வரி அதிகமாக்கப்பட்டது. அவர்களே, தாங்கள் குறைத்துவிட்டோம், அதனால் மக்களுக்கு நன்மை என்று கூறுகிறார்கள். 8 ஆண்டுகளாகக் குறைக்காத வரியை, தற்போது ஏன் குறைத்தார்கள் என்றால், மக்களை 8 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளார்கள். தேர்தலுக்காக ஏழை மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று தற்போது வரிக் குறைப்பு என்று கூறுகிறார்கள்.

Advertisment

2010 முதல் 2013 வரை மன்மோகன் சிங் பிரதமராகவும், ப. சிதம்பரம் நிதியமைச்சராகவும் இருந்தபோது, இதே ஜிஎஸ்டியை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்கள். இரவு பகலாக விவாதம் நடந்தது. அப்போது, ஒரே வரி, குறைவான வரி என்று கூறினார். இதுதான் ஜிஎஸ்டியின் இலக்கணம். அப்போது, பாஜக மேல்சபையில் ஜிஎஸ்டி வரி முறையைக் கொண்டு வர வாக்களிக்க மறுத்தார்கள். அன்று அவர்கள் வாக்களித்திருந்தால், ஜிஎஸ்டி ஒரே வரி, சீரான வரி, அன்று இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக, இதே ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தார்கள். காங்கிரஸ் கட்சி அதைத் திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டியில் மிக அதிகமான வரி விதிப்பைச் செய்தார்கள். எளிய மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

Advertisment

அமெரிக்காவிற்கு இரண்டு நோக்கம் உள்ளது. ஒன்று, உண்மையிலேயே அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் குறை ஏற்படாது. இந்தியர்களும், சீனர்களும், பாகிஸ்தானர்களும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், அமெரிக்கர்கள் அப்படி வேலை செய்ய மாட்டார்கள். அதனால், அமெரிக்க நிறுவனங்கள் மற்ற நாட்டவரை வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, ஹெச்1பி விசா கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுநர்கள், இந்தியாவிற்கு வாருங்கள், இங்கு நிறைய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தில் உள்ள ஐ.டி. துறை வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். இதுதான் எனது கருத்தும்.

கரூரில் காங்கிரஸ் கட்சித் தலைவரை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்தது, நாகரிகமான செயல் அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். நாங்கள் அதிகமான தொகுதிகள் வேண்டும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பது எங்களது உரிமை. அதற்காக, நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம், வேறு கூட்டணியில் சேர்ந்துவிடுவோம் என்று கூறுவது, சமூக ஊடகங்களில் வரும் வதந்தியாகும். திமுகவினர் எங்களது கூட்டணியின் நண்பர்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது எங்களது உரிமை. அதனை, எடப்பாடி பழனிசாமி திமுகவின் விசுவாசி என்று கூறுவது தவறானதாகும். நாங்கள் 110 இடங்களில் போட்டியிட்டவர்கள். தற்போது குறைவான இடங்களில் போட்டியிடுகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என்று கருதுகிறோம்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி அரசியல் பேச வேண்டுமே தவிர, தனிநபர் விமர்சனம் செய்யக் கூடாது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைப் பற்றி தனிநபர் விமர்சனம் செய்கிறார்.தமிழக வெற்றிக் கழகத்தினால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படாது. எங்களது வாக்கு 45 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. தவெகவின் வாக்கு சதவீதம் எவ்வளவு என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதிமுக கூட 20 முதல் 23 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் இந்த முறை பெற முடியாது. அவர்களுடன் கூட்டு சேருபவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆதலால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

இவருடன் மாநிலச் செயலாளர் பிபி.கே. சித்தார்த்தன், மாவட்டத் தலைவர் என்.வி. செந்தில்நாதன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.என். ராதா, நகர காங்கிரஸ் தலைவர் தில்லை ஆர். மக்கீன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.