தமிழகம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 1 லட்சத்திற்கு அதிகமான உணவகங்கள் பில்லிங்கில் ஒரே மாதிரியான மென்பொருளைப் பயன்படுத்தி உள்ளன. இந்த மென்பொருள் பயன்பாட்டின் மூலமாகப் பல லட்சக்கணக்கான கோடிகள் வருமானம் மறைக்கப்பட்டு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகத்தில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

இதனையடுத்து, ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக இந்த வரி ஏய்ப்பிற்கு, அந்த உணவகங்களில் கட்டணங்களைப் பெறுவதற்காக பில்லிங்கில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் தான் முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மென்பொருளைப் பயன்படுத்திய தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திய பல்வேறு உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  

Advertisment

இந்த உணவகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஏஐ எனும் தொழில் நுட்பத்தின் மூலமாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், முதல் கட்டமாக 1.77 லட்சம் உணவகங்களின் தரவுகளின் அடிப்படையில் 2.43 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் சோதனை செய்யப்பட்டன. அடுத்ததாக, சம்பந்தப்பட்ட மென்பொருளில் 60 டெராபைட் அளவிலான தரவுகள் இருந்த நிலையில், அவைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில், கடந்த 2019-20 நிதியாண்டிலிருந்து இது வரை 70,000 கோடி ரூபாய் வரையிலான வருவாய்  மறைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதே போல, இந்த சோதனையின் மூலமாக ஜிஎஸ்டி வரியிலும் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. நாட்டின் உணவு சந்தையில் கிட்டத்தட்ட 10 சதவிதத்தை உள்ளடக்கிய இந்த உணவகங்கள், வருமான வரி தங்களின் போது இந்த மென்பொருளின் வாயிலாகப் பெருவாரியான வருவாயை மறைத்து  கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. இதில், கர்நாடகாவில் 2000 கோடியும், தெலங்கானாவில் 1500 கோடியும், தமிழ்நாட்டில் 1200 கோடியும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment