நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகாரை அடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று (17.06.2025) காலை முதல் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் கிட்னி விற்பனைக்காக இடைத்தரகர் செயல்பட்டது ஆனந்தன் என்பது தெரியவந்தது.
இவர் ஏழை தொழிலாளர்களைத் திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பணம் வாங்கி தருவதாகவும், கிட்னியை விற்பனை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனந்தனிடம் இது விசாரணை செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது. அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஆனந்தனின் வீடும் பூட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தோண்டத் தோண்ட பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கிட்னி விற்பனை என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் நிலையில் அந்த பகுதி மக்கள் இதை சாதாரண செயலாகவே பார்க்கும் அளவிற்கு அங்கு கிட்னி விற்பனை கேஷுவலாக நிகழ்ந்துள்ளது. காரணம் 1990களில் இருந்தே அந்த பகுதியில் கிட்னி விற்பனை நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளது தான். குறிப்பாக ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து மூளை சலவை செய்து கிட்னி கொள்ளை நடைபெற்றுள்ளது.
ஒரு கிட்னிக்கு 10 லட்சம் ரூபாய் வரை விலை பேசி அதற்கு முன்பணமாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் கொடுக்கப்படுவதால் வறுமையில் உள்ளவர்கள் எளிதாக மூளை சலவை செய்யப்பட்டு கிட்னியை விற்க முன்வந்துள்ளனர். இதைவிட கொடுமை கிட்னியை விற்றவர்களில் சிலரே பின்னாளில் கிட்னி விற்பனையில் இடைதரர்கள் ஆனது தான். கிட்னி விற்பனையில் பலருக்கு முன் பணம் கொடுக்கப்பட்டதோடு பேசப்பட்ட மீதி தொகை கொடுக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் பிரச்சனை காரணமாகவே இந்த விவகாரம் வெளியாகி பூதாகரமாகி உள்ளது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. முறையான விசாரணையில் இறங்கினால் இன்னும் தோண்டத் தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.