சென்னையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று தார் லோடு ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கிச் சென்றது. இந்த லாரியைத் துரைராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரி ஓட்டுநர் துரைராஜ் லாரியை இடதுபுறமாகத் திருப்பினார். அப்போது பின்னால் கடலூர் பாதிரிக்குப்பத்தில் இருந்து சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு அதிவேகமாக வந்த கார் டேங்கர் லாரியின் பின்பக்கம் மோதி லாரியின் கீழே இடர்பாடுகளில் சிக்கியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சூரியகுமார், சந்தோஷின் பெரியம்மா பாக்கியலட்சுமி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தின் காரணமாக உளுந்தூர்பேட்டை-சேலம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்தவர்கள் இடர்பாடுகளில் சிக்கியதால் அவர்களின் உடல்களை மீட்க உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டு நவீன இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பயணிக்கிறது. இந்தச் சாலையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைக் கடக்கும் போது அதிக அளவு விபத்துகள் நடக்கின்றன. தினசரி இந்தச் சாலையில் விபத்துகள் நடப்பதால் இது மரணச் சாலை என்று மக்கள் அழைக்கும் அளவிற்கு விபத்துகள் நடக்கின்றன.வாகனங்களின் அதீத வேகம் மற்றும் சாலை விதிகளை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எனப் பெரும்பான்மையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் அடிக்கடி இந்தச் சாலையில் விபத்துகள் நடந்தபடியே இருக்கின்றன. விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் போக்குவரத்துக் காவல் துறையும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/24/untitled-1-2025-10-24-18-25-15.jpg)