தமிழக பள்ளிகளில் ‘ப’ வடிவத்தில் இருக்கைகளை மாற்றி மாணவர்களை அமர வைக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘பள்ளி வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு, கற்றலை மேம்படுத்துவதிலும், தொடர்புகளை ஊக்குவிப்பதிலும், வசதியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இனிமேல் தமிழகத்தில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும், பலகையையும் ஆசிரியரையும் தெளிவாகப் பார்க்க முடியும். ஆசிரியரும் மாணவர்களும் எந்தவித மறைவின்றி உரையாடலாம். மாணவர்களை எளிதாக கண்காணிக்க முடியும்.

கடைசி இருக்கை மாணவர்கள் என்ற எண்ணம் இருக்காது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவும், ஆசிரியரை கவனிக்கவும் வசதியாக இருக்கும். வரிசையான இருக்கைகளில் அமரும் போது பாடத்தை கவனிப்பதற்கு மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும். இதனை தவிர்க்க ‘ப’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள மேசைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். ‘ப’ வடிவால் கடைசி பெஞ்சுகள் இனி இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.