Tamilnadu Ministers inaugurated The work of constructing across the Thenpennai River
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் இருபுறமும் உள்ள 3 ஏரிகளுக்கு ஏற்கனவே உள்ள வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வழங்க தென்பெண்ணையாற்றின் குறுக்கே 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு அமைக்க 2025 - 2026ஆம் ஆண்டு நீர்வளத்துறை அமைச்சரால் சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்த அணைக்கட்டு அமைக்கப்படுவதால் தகடி, கூவனூர், விளந்தை, சாங்கியம் மற்றும் ஜா.சித்தாமூர் வாய்க்கால்களின் மூலம் 41,30,767 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், அப்பகுதியில் சுற்றி உள்ள 124 கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பயன் பெறும்.
அதன்படி, இந்த திட்டத்தை தமிழ்நாடு பொதுப்பணி துறை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ. வேலு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் செங்கல் எடுத்து வைத்து துவக்கி வைத்தனர். பின்னர் அதே பகுதியில் இருவரும் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
அதன் பின்னர், இந்த நிகழ்வின் மேடையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இருந்த முதல்வர்களில், நீர் ஆதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து 42 அணைகளை கட்டிய வரலாறு கலைஞரையே சேரும். அதேபோன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல. திருவண்ணாமலை பகுதிக்கு முதல்வர் வரும்போது அவரை வைத்துக் கொண்டு சொன்னேன், இது ஆன்மீகமும் திராவிடமும் கலந்த மண் என்று. காரணம், கடந்த ஆட்சிக்காலத்தில் இங்குள்ள கோவில்கள் புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்து இருந்தது.
நம்முடைய திமுக ஆட்சி அமைந்தபின்பு தான், பல்வேறு கோவில்களை புணரமைப்பதற்காக பணம் ஒதுக்கப்பட்டு, பல கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. ஆன்மீகம் என்கிற பெயரில் மண் சோறு சாப்பிடுவது, அழகு குத்தி கொள்வது, மொட்டை அடித்துக் கொள்வது உள்ளிட்ட வேலைகளை கடந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்காக செய்து கொண்டனர். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் எங்களுக்காக ஆன்மீகத் துறை செயல்படவில்லை மக்களுக்காக ஆன்மீக பணி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
Follow Us