நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய போது, பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சபாநாயகர் அப்பாவு பேரவையின் மரபை எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். இதற்குகடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்ற விதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக  சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றச்சாட்டி முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இன்று பேரவையில் ஆளுநர் உரை மட்டுமே இருக்கும், மற்ற விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

கூட்டத்தொடரின் முதல் நாளே ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்றே தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த குழுத் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை வரும் 24ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக நாளை (21-01-26) சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட இருக்கிறது. நாளை மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.

அதனை தொடர்ந்து வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுவார் என்று கூறப்படுகிறது. 3 நாள் நடக்கக்கூடிய விவாதத்திற்கு கூட்டத்தொடரின் கடைசி நாளான 24ஆம் தேதி முதல்வர் விரிவான பதிலுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment