தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘41 பேர் பலி தொடர்பாக எங்கள் மீது காவல்துறையால் புணையப்பட்ட வழக்கு போடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரில் அறிவுரை வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், என்ன அறிவுரை என்று கூறவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது. இதனிடையே, அரசு தரப்பில், ‘முன்ஜாமீன் கோரியவர் முன்னாள் எம்.எல்.ஏ என்பட்கால் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மனுதாரர்கள் கேட்ட முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (03-10-25) நீதிபதி ஜோதிமணி முன்பு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டதாவது, ‘ஒரு பொதுச் செயலாளர் தொண்டரை கொலை செய்ய முயல்வாரா?. பரப்புரைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் எனக்கு பொறுப்பல்ல, மதியழகனுக்கே பொறுப்பு. அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மதியழகன் தவறு செய்யவில்லை, காவல்துறையும் அரசும் தான் தவறு செய்தன. விஜய் 4 மணி நேரம் தாமதமாக கரூர் பரப்புரைக்கு வந்தார். பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றோம். ஆனால், விஜய் இரவு 7 மணிக்கு வந்துவிட்டார். முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவின் போது 2 பேர் இறந்தனர். ஷாருக் கான் ரயிலில் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால் வழக்குப் பதியவில்லை. கூட்டம் அதிகம் இருந்ததால் நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாம். கூட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு இருக்கிறது. கடமையை செய்யாமல் கட்சியினர் மீது காவல்துறையினர் குற்றம் சுமத்துகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘304(ஏ) பிரிவிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு காரணம் யார் என்று கண்டறிய விசாரணை அவசியம். விசாரணை தொடக்க நிலையில் தான் இருக்கிறது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். கட்சித் தலைவர் 12 மணிக்கு வருவார் என்று கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்’ என்று கூறினர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘ஆனால், 3-10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதே. 41 பேரின் உயிரிழப்புக்கு பொறுப்பான தகவல்களை வழங்கவில்லை. காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ‘ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை, ஆனால் நடத்தினார்கள்’ என்று தெரிவித்தனர். அப்போது நீதிபதி, ‘அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தினால் ரத்து செய்திருக்கலாமே?’ என்ற கேள்விக்கு ‘மேலும் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை’ என அரசு தரப்பு பதிலளித்தனர்.
மேலும் அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘ஆயிரக்கணக்கான காலணிகள் கிடந்தன, ஆனால் தண்ணீர் பாட்டில்கள் இல்லை. நிகழ்ச்சி துரதிஷ்டவசமானது. ஆனால் நிகழ்வு நடந்த பின் இவர்கள் காணாமல் போய்விட்டனர். பள்ளிக் குழந்தைகள் முதல் பலர் கூட்டத்திற்கு வந்துள்ளனர். பொறுப்பான கட்சி பொறுப்பாளர்கள் செய்யும் வேலையா இது?. போதிய ஏற்பாடுகளை செய்யாமல் மக்களை கூட அழைத்துவிட்டு தலைமறைவாவது ஏற்கத்தக்கதல்ல. மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் முயன்றனர், பாதுகாப்பு வழங்கப்பட்டது. கட்சியினரால் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும், அவர்கள் எதையும் அறிவிக்கவில்லை. நீரிழப்பு காரணமாகவே பெரும்பாலனோர் உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாவது ஏற்கத்தக்கதல்ல, விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். விஜய் கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி இருக்கும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை கடினமாகிவிடும். பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர், முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று தெரிவித்தனர். அதற்கு, ‘கூடியிருந்த மக்கள் கல் எறியவில்லை, ஏன் தடியடி நடத்தப்பட்டது?’ என்று மனுதாரர்கள் தரப்பினர் கேள்வி எழுப்ப்பினர். அப்போது, ‘1 எஸ்.பி, 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்’ என்று கூறினர். அதற்கு மனுதாரர்கள் தரப்பில், ‘ஏன் காவலர் கூட காயப்படவில்லை, ஆதாரமற்று விவரங்களை சொல்லக்கூடாது’ என்று தெரிவித்தனர். இப்படியாக மனுதாரர்கள், அரசு தரப்பு இடையே காரசார வாதம் நடைபெற்று வந்த நிலையில், முன்ஜாமீன் மீதான வழக்குகள் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.