மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று (23-08-25) இரவு முதல் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த சூழலில், சென்னை கண்ணகி நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் தேங்கிய மழைநீரில் கால் வைத்து தூய்மை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி என்ற பெண், இன்று அதிகாலை 4:30 மணியளவில் வீட்டிலிருந்து பணிக்காக திருவான்மியூர் சென்றார். அப்போது அவர் கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் நடந்து சென்ற போது, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் குறுக்கே கிடந்த மின்சார வயரில் இருந்து மின்சாரம் கசிந்து வரலட்சுமி மீது பாய்ந்தது. இதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே, அந்த பகுதியில் மின்சாரம் அவ்வப்போது மின்கசிவு ஏற்படுவதாக மின்வாரியத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்துக் கொண்டு வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உயிரிழந்த வரலட்சுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வரலட்சுமியின் குடும்பத்தினரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார்.