தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை கடந்த 5ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணையவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவரும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்தார்

Advertisment

praveenchakravarthu
Praveen chakravarthy with Congress MP Rahul gandhi

இந்த சூழலில் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் வாங்கியுள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்றும் திமுக அரசை விமர்சித்து பிரவீன் சக்கரவர்த்தி பதிவை ஒன்றை வெளியிட்டார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. திமுக அரசை விமர்சித்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என மாணிக்கம் தாகூர் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரியதாக செய்தியில் படித்தேன். காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, விசிக ரவிகுமார், மதிமுக வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் ஆகியோரிடம் ‘உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்’ என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

Advertisment

manickamtagore
Congress Mp Manickam Tagore

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன, பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல, கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைமைகள், தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், அண்ணன் வைகோ மற்றும் திருமாவளவன் அண்ணனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல, ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.