Tamilnadu Congress party members struggle against Change in 100-day work plan
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் விதமாக கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை கொண்டு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் இந்த சட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்வதற்கான உத்தரவாதத்தை அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றம் செய்து ‘விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (VB - G RAM G) மசோதா - 2025 ’ என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் மூலம், 100 நாட்கள் வேலை என்பதை 150 நாட்களாக மாற்றிருந்தாலும் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ (விபி ஜி ராம் ஜி) என்ற பெயரில் திட்டத்தை மாற்றியமைத்ததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, இந்த புதிய மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு புதிய திட்டம் செயல்பட இருக்கிறது.
இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தாம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நடைப்பயணத்தில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா கலந்து கொண்டு இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை வரை நடைபெற இருக்கிறது. இந்த நடைப்பயணத்தின் இறுதியில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
Follow Us