டெல்லி செங்கோட்டை அருகே இன்று கார் வெடித்து 10க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

தலைநகர் டெல்லியின் முக்கிய சுற்றுலாத் தளமான செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உருகுலைந்து போனது.  கார் வெடித்துச் சிதறியதை அடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் செங்கோட்டைக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisment

இதனிடையே, கார் வெடித்து சிதறிய இடத்தில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 13 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானாவில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில், டெல்லி போலீசார், என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அண்டை மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில பா.ஜ.க அரசு மற்றும் மத்திய அரசின் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடந்திருப்பது பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டதால் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயங்களுடன் போராடுபவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.