தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க இன்னும் 1 வார காலமே இருக்கும் நிலையில், விவரங்கள் தெரியாததால் பல பேர் படிவங்களை பூர்த்தி செய்யாமல் உள்ளனர். வரும் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படவில்லை என்றால் அவர்களுடைய பெயர் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. அதற்கு பிறகு புதிதாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், 2002 மற்றும் 2005ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை கண்டறிய இயலாவிட்டால் பிற விவரங்களை மட்டும் நிரப்பலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2002, 2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில், பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அவ்வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். அதனால், எஸ்.ஐ.ஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை. தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து தந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/27/sirtamilnadu-2025-11-27-19-17-19.jpg)