Tamilisai Soundararajan's criticism Sending Kamal Haasan was DMK's biggest mistake
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் கடந்த 4ஆம் தேதி பேசினார்.
அப்போது அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுக்கும் வகையில், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்த நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் பிச்சை எடுக்க கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மை தான். தந்தாய் தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழும் நலமுடன்” என்று கூறினார்.
மாநிலங்களவையில் கமல்ஹாசனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கமல்ஹாசன் உரையை படிக்க வேண்டுமென்றால் அதற்கு கோனார் உரை வேண்டுமென்று நான் தலைவராக இருக்கும் போதே சொன்னேன். கோனார் உரை வச்சு தெளிவுரை படித்தால் மட்டும் தான் அவருடைய அறிக்கையும் சரி பேச்சும் சரி தெரிந்துகொள்ள முடியும். அவர் பேசியது எதுவுமே காதில் விழவில்லை. அவர் பேசிய மொழி புரியவே இல்லை. பெரியார் சொன்னதை நிர்மலா சீதாராமன் சொன்னதாக கூறுகிறார். ஆகவே அவர் பெரியாருக்கு தான் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் பிச்சை வாங்கும் மொழி அல்ல என்று பெரியாருக்கு தான் பதிலடி கொடுத்துள்ளார். அது தெரியாமல் பெரியாரின் பக்தர்கள் கை தட்டி உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நெடுநாள் இருந்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள் என்கிறார். 2026 தேர்தல் வேற வருகிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். நம்மை பாராட்டுவதற்கு இவரை அனுப்பினால், நமக்கே வேட்டு வைக்கிறார் என்று அதிர்ச்சியில் இருந்திருப்பார். திமுக சில தவறுகள் செய்யும், மன்னிக்க முடியாத தவறுகள் செய்யும். அதில் கமல்ஹாசனை அங்கு அனுப்பியது தான் திமுகவின் மிகப்பெரிய தப்பு. நடிக்கிறவர் நடிச்சிட்டு இருக்க வேண்டியது தானே, அங்கு போய் வசனம் பேசுகிறேன் என்று தெரியாத வசனங்களை தப்பு தப்பாக பேசி கைத்தட்டு வாங்குவதற்கு டிராமா போட்டுட்டு இருக்கிறார். தமிழ்நாடு தலைகுணிந்து கொண்டிருக்கிறது. அண்ணா, காமராஜர் போன்றவர்கள் எல்லாம் இருந்த பாராளுமன்றத்தில் இவர்களை போன்றவர்களை அனுப்பி திமுக கேலி கூத்தாக்கி கொண்டிருக்கிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
Follow Us