விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (09.01.2026) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததால், திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். 

Advertisment

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பிரதமர் தான். 

Advertisment

ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்க்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அவசரநிலை பிரகடனத்தின் போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகம் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது என்று சொல்கிறார். 

jana-nayagan-postponed

அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத்துறையினருக்கு அழுத்தம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. சட்ட ரீதியாக சென்சார் போர்டு (CBFC). செயல்படுகிறது அதன் நடைமுறையை அரசியலாகி கொண்டு இருக்கிறார்கள். விஜய்  அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை. சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment