விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (09-01-26) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காத விவகாரம் குறித்து, திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “உலகிலேயே பெரிய ஜனநாயகனாக இன்று கொண்டாடப்படுவது பிரதமர் நரேந்திர மோடி தான். ஜனநாயகத்தை தாண்டி அவர் எதையுமே செய்தது கிடையாது. 1975இல் அவசரநிலை பிரகடனத்தை கொண்டு வந்து கருத்து சுதந்திரத்தை நெறித்தவர்கள் இன்றைக்கு கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டது. பா.ஜ.கவுக்கும் பிரதமர் மோடிக்கும் இந்த சென்சார் சான்றிதழுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்ட விதிகளின்படி அது நடக்கும். அது எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிட்டு வெளியாகட்டும்.
அந்த வெளியிடும் நாளை நாங்களும் காத்திருக்கிறோம். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இதை விஜய் அரசியல் செய்தால் பரவாயில்லை. விஜய்யின் படத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவரை யார் எதிர்த்துக் கொண்டிருந்தார்களோ இப்போது பொங்கி அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதை கண்டு விஜய் ஏமாற வேண்டாம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/vijaytam-2026-01-09-10-05-24.jpg)