தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (26-01-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்றைய தினம் இந்த நாடு பாதுகாப்பாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி தான். ஆனால், தொடர்ந்து பிரிவினைவாதத்தையும் பிரிவினை கருத்தை சொல்லி தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது போலவும், எப்போதும் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எப்போது பார்த்தாலும் ஏதோ அழுத்தத்தில் இருப்பது ஒரு தியாகியை போல் பேசிக் கொண்டிருக்கிறார். வாக்களிக்கும் மக்களுக்கு உழைத்து தான் ஆக வேண்டும். இன்று பன்முகத்தன்மையை கொண்டாடுகிறோம் என்று சொல்லும் முதலமைச்சர், நிச்சயமாக பன்முகத்தன்மையை கொண்டாடுவதில்லை.

Advertisment

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தி திணிப்பு கிடையாது. மொழி மட்டுமே அதன் கொள்கை கிடையாது. இந்த கொள்கையை மொழிப் பிரச்சனையில் சுருக்கி தமிழக மாணவர்கள் பயன்படாத அளவிற்கு முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். முதல்வரின் பதற்றம் எல்லாம், உதயநிதியை முதல்வர் ஆக்குவதில் தான் இருக்கிறது. அவரது சுயநல நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து அதிமுக ஒரு ஊழல் கட்சி என்றும், அது பா.ஜ.கவிடம் அடிமையாகிவிட்டது என்று தவெக தலைவர் விஜய் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

Advertisment

அதற்கு பதிலளித்த அவர், “தம்பி விஜய்க்கு அனுபவம் இன்னும் போதாது என்று நினைக்கிறேன். அவர் தனித்து விடப்பட்டதால் ஏதோ அப்படி பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் உச்சபட்சத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்கிறார். அரசியலில் நிறைய பேர் அப்படி உச்சபட்சத்தில் இருந்து வந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு நான் மருத்துவராக இருந்து உச்சபட்சத்தில் இருந்து தான் வந்தேன். அதனால் அரசியலுக்கு இது புதிது கிடையாது. ஏதோ தியாகம் செய்கிறேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். 30 வருடமாக நடித்து முடித்து தானே வருகிறார். அதனால் தம்பிக்கு அனுபவம் பத்தாது. ஒரு சின்ன தம்பி பேசுகிறார் என்று தான் நான் எடுத்து கொள்கிறேன். அவர் பேசுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறைந்து விடப்போவதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். உண்மையிலேயே திமுக கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தான் போட்டியே. அவருடன் கூடுதல் சக்தியாக வருவதற்கு பல பேர் தயாராக இல்லை. ஏனென்றால் அவருக்கு அரசியலில் அனுபவம் இல்லை.

விஜய் ஜீரோ மாதிரி. ஜீரோ தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது. ஆனால், ஜீரோ இன்னொருவடன் சேர்ந்தால் தான் மதிப்பு. திமுகவை உண்மையிலேயே தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருந்தால், அவர் கூட்டணியில் சேர வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று மக்கள் நம்புகிறார்கள். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளே திமுக வெற்றி பெறும் என்று நம்பவில்லை. காங்கிரஸில், விசில் அடிப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தம்பி விஜய், எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால், திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நியாபகம் வைத்து அவர் சிந்திக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். 

Advertisment