தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. மாநாட்டில் ‘உங்கள் விஜய்... நான் வரேன்...’ என்ற பாடலுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. மேடையில் பேசிய விஜய் தொண்டர்களின் ஆராவாரத்துக்கிடையே உணர்ச்சிப் பொங்க பேசினார். சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக திமுக, பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது. மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்தும், பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தவெக மாநாட்டை பொறுத்தவரைக்கும் ஒரு அரசியல் மாநாடாக நான் பார்க்கவில்லை. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டமாகத் தான் பார்க்கிறேன். அவருடைய பேச்சில் ஒரு முதிர்ச்சியற்ற தன்மையை நான் பார்க்கிறேன். கொள்கை எதிரி பா.ஜ.க என்கிறார், ஆனால் அவருடைய கொள்கை எது என்று அவர் சொல்லவில்லை? உங்கள் கொள்கை தான் என்ன?. அவர் தெளிவற்ற தன்மையில் இருக்கிறார். எல்லாவற்றிருக்கும் மேலாக கட்சத்தீவை பற்றி சொல்கிறார். நிச்சயமாக கட்சத்தீவை மீட்பதில் பிரதமரின் பங்கு இருக்கும். ஆனால், அவர் சமீபத்தில் தீவிரவாதத்தை ஒழித்தத்தற்காக உலகமே பிரதமரை பாராட்டுகிறது. அதனால் ஒரு பக்கமாக நீங்கள் பேசக்கூடாது.
இந்த மாநாடு அரசியல் கூட்டம் மாதிரி இல்லை. அவரை பார்த்த உடனே கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது. அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவராக பார்க்காமல் இன்றும் ஒரு நடிகராக தான் பார்க்கிறார்கள் என்பது தான் எனது கருத்து. கட்சத்தீவை பற்றி பேசுகிறீர்கள், ஏன் காங்கிரஸ் பற்றி பேச மறுக்கிறீர்கள்?. எப்போதும் மாதிரி ஒரு திரைப்படத்தை பார்த்த ஒரு ஜோரில் எல்லோரும் பார்த்தார்கள், கை தட்டினார்கள் கிளம்பிவிட்டார்கள் அவ்வளவு தான். 2029 வரை சொகுசு பயணம் மேற்கொள்ள மோடி ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்று கேட்கிறார். உலகம் முழுவதும் இந்த மக்களின் சோக பயணத்தில் பங்கெடுத்து கொண்டு அவர்களோடு அவர் துணை நின்று பெண்களின் குங்குமம் பாதிக்கப்படக்கூடாது என்று ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை பிரதமர் எடுத்தார். இந்த உலகத்தை மூன்றாவது பொருளாதார நாடாக இட்டுச் சென்று கொண்டிருக்கிறார். கொரோனா நேரத்தில் பிரதமர் இல்லை என்றால் விஜய்க்கு கூட தடுப்பூசி கிடைத்திருக்காது. அதனால், கொஞ்சம் நன்றியோடு நினைவு கூற வேண்டும்.
சிங்கம் என்று சொல்கிறார். அப்புறம் அரசியல்வாதிகள் எல்லாம் புத்திசாலிகள் இல்ல, நடிகர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்று சொல்கிறார். அவராக ஒன்றை உருவகப்படுத்தி பேசுகிறார். தாமரை தண்ணீரில் ஒட்ட வேண்டியதில்லை, தாமரை தண்ணீரில் மலரும். அதனால், தமிழகத்தில் தாமரை தண்ணீரில் மலரும், ஒட்டவேண்டியதில்லை. உங்கள் சின்னம் எது? எதில் ஒட்டிகிட்டு இருக்கீங்க? இப்படி நிச்சயமற்ற தன்மை வைத்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் தம்பி விஜய் இன்னும் அரசியல் தலைவராக மாற வேண்டும் என்று எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.