Tamilisai Soundararajan request TVK leader vijay dont aganist SIR
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று (13-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ இந்த எஸ்ஐஆர் என்கின்ற நமது வாக்காளர் தீவிர சீர்த்திருத்த இயக்கத்திற்கு புத்தகம் ஒன்றை தயாரித்திருக்கிறோம். எஸ்.ஐ.ஆர் பணியை, எதிர்க்கட்சிகள் குறிப்பாக திமுகவைச் சார்ந்த கட்சிகள் தான் எதிர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு, தம்பி விஜய்யின் கட்சி 16ஆம் தேதி இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். இது வேண்டாத ஒன்று. அதே மாதிரி காங்கிரஸ் தனியாக போராட்டம் அறிவிக்கிறார்கள். இந்த பணியில் உங்களுடைய பிஎல்ஏ முகவர்கள் தான் பணியாற்றப் போகிறார்கள். வெளிப்படையாக பணியாற்றுகிற இதற்கு நீங்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்?. ஆர்ப்பாட்டம் செய்யும் சக்திகள், இந்த பணியை துரிதமாக நடத்துவதற்கு நீங்கள் எல்லாம் துணை புரிந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
ஏற்கனவே 6.5 கோடி வாக்காளர்களில் ஐந்தரை கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகப்பட்டிருக்கிறது. இதில் எல்லாமே இலகுவாக தான் இருக்கிறது. இன்றைக்கு தம்பி விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பலாம் என்று இருக்கிறேன். இதை படித்துவிட்டு முடிவு செய்யட்டும். திமுக தான் அரசியலுக்காக போராட்டம் செய்கிறார்கள். நீங்கள் புதுக் கட்சி, உங்களுக்கு இது இன்னும் உறுதுணையாக இருக்கும். போலி வாக்காளர்கள் இல்லாமல் இந்த தேர்தலை நீங்கள் சந்திக்க போகிறீர்கள். பீகாரில் இதற்கு முன்னால் இருந்ததை விட 10% அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இந்த தேர்தல் ஆணைய நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. அதே நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்க போகிறார்கள். முறைகேடாக வாக்குகளை பதிய வைத்து அதன் மூலம் வெற்றி பெறுபவர்கள் தான் பதறுகிறார்கள். எனவே, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆக, இது ஜனநாயகத்திற்கு தேவையான ஒன்று” என்று கூறினார்.
Follow Us