மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில் நேற்று (01-01-26) நடைப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை தொடங்கியது. இந்த நடைப்பயணம் வருகிற 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisment

இந்த நடைப்பயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த துவக்க விழாவில் காங்கிரஸ் பங்கேற்காமல் இருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் கே.என்.நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிலையில் வைகோவின் நடைப்பயண துவக்க விழாவை பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “போதைக்கு வழி செய்பவர்களே விழாவை துவக்கி வைத்தால் எப்படி? இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணம் போதை தான். அதே மாதிரி ஒரு அமைச்சர் ஜீரோ கஞ்சா என்று சொல்லுகிற நேரத்தில் மதியம் கஞ்சா வைத்திருப்பவர் பிடிபடுகிறார். அண்ணன் வைகோ அறிவாலயத்துக்கு தான் நடைப்பயணம் போயிருக்க வேண்டும். போதை இல்லாத தமிழகத்தையும் டாஸ்மாக் இல்லாத தமிழகத்தையும் உருவாக்க அறிவாலயத்தில் தானே முடிவு எடுக்க வேண்டும். அதனால் அவர் இப்படி போவதற்கு பதிலாக அறிவாலயத்துக்கு தான் அவர் நடைப்பயணம் செய்திருக்க வேண்டும்.

வைகோ மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த வயதிலும் நடைப்பயணம் செய்வது உண்மையிலேயே வியப்படைகிறேன். அதனால் அவருடைய நடைப்பயணத்தை துவங்கி வைப்பதற்கு முதல்வர் போனால் எப்படி? முதல்வர் கையில் தானே எல்லாமே இருக்கிறது. இருக்கிற இடத்தில் இருப்பதை விட்டுவிட்டு எந்த நடைப்பயணம் போய் எதை வலியுறுத்த போகிறீர்கள்?” என்று கூறினார். 

Advertisment