தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குருப் 2 மற்றும் 2 ஏ அறிவிப்பைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் - 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9 ஆயிரத்து 457 பேரும் தகுதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு இன்று (08.02.2025) காலை நடைபெற இருந்தது. அதன்படி இன்று காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வும், பிற்பகலில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித் தேர்வும் நடைபெற இருந்தது.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வரவில்லை எனப் புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு முழுவதும் குருப் 2ஏ முதன்மை தேர்வு மற்றும் பிற்பகலில் நடைபெற இருந்த தமிழ்த் தகுதித் தேர்வையும் ரத்து செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் பிறப்பித்திருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/08/tamilisai-soundararajan-2026-02-08-13-21-11.jpg)
இதற்கிடையே தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம். பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம். வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள். விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து தேர்வுக்கு வந்தால், தேர்வு எழுதுவதே போராட்டமாக போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள் நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us