பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க தனது வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் வீட்டிலேயே தடுத்து நிறுத்தினார். அதனையும் மீறி தமிழிசை சவுந்தரராஜனை போராட்டக்காரர்களை சந்தித்த்தார். இதற்காக தமிழிசை சவுந்தரராஜன் மீது சென்னை காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்திரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக அராஜக முறையில் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் செயலாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அவர்களின் இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் ஆக்கபூர்வமாக முதலமைச்சர் வந்து பேசி ஒரு ஆரோக்கியமான முறையில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் கொடூரமாக அவர்கள் கைது செய்து கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது . ஆனால் அவர்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதல்வர் கேளிக்கை படம் பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட வேதனை. இதற்கெல்லாம் 2026 தான் பதில் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.