ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (21.11.2025) காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். பயனத்திட்டத்தின்படி பிரதமர் மோடி, நாளை (23.11.2025) வரை என 3 நாட்கள் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். உலகளாவிய தெற்கில் நடைபெறும் 4வது தொடர்ச்சியான ஜி - 20 உச்சி மாநாடு ஆகும். அதன் ஒரு பகுதியாக ஜி - 20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள 6வது ஐ.பி.எஸ்.ஏ. (IBSA - India Brazil South Africa Dialogue) உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அந்நாட்டில் வெண்டா மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின் படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாச்சாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது.
Follow Us