கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (28-06-25) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஃபஹத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அப்துர்ரஹீம், மாநிலச் செயலாளர் அன்சாரி, சேட் முகமது, பெரோஸ் கான், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் அஹது, மாவட்ட துணைச் செயலாளர் மஹபூப், மாவட்ட தொண்டரணி செயலாளர் மைதீன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் சையது ரிஸ்வான், மாவட்ட மாணவரணி செயலாளர் பயாஸ் உள்ளிட்டவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மாநில துணைத்தலைவர் அப்துர்ரஹீம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். சென்ற தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகரித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார். தான் சொன்ன வாக்கை காக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கடத்தல் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஃப்தாப் என்பவருக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் மே 27ஆம் தேதியன்று விடுதலையாக இருந்தவரை, உத்தரப் பிரதேச அரசு 28 நாட்கள் அலைக்கழித்து ஜூன் 24 ஆம் தேதி விடுவித்துள்ளது.
மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈடுபடும் உ.பி. பாஜக அரசை இந்த வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். இந்திய விமானத்துறை கட்டமைப்பிற்கு 2023-24ல் ரூ.755 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டில் அது வெறும் ரூ.70 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் விமான போக்குவரத்து துறை மிகப்பெரிய அளவிற்கு சீரழிந்துள்ளது. இந்நிலை தொடர்வது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகி வருகிறது” என்று கூறினார்.