விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது நம் முன்னோர்களின் அனுபவ மொழி. இப்போது ஒரு பயிர் எவ்வளவு விளைச்சல் கொடுக்கும் என்பதை ஏஐ மூலம் துல்லியமாக கணித்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பைச் செய்து அசத்தியிருக்கிறார்கள் தமிழக இளம் கணினி பொறியியல் ஆராய்ச்சி இளைஞர்கள். தங்கள் கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையும் வாங்கியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் ஆராய்ச்சி படிப்பை முடித்த இளம் ஆய்வாளர்களான வேத கரம்சந்த் காந்தி, ஸ்ரீபிரசாத், சஞ்சீவ்குமார் சர்மா, வினய்குமார், பிரவீன், சரவணன், உசைன் ஷரீப், சந்தேஷ் ஆகியோர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து தங்கள் ஆய்வைத் தொடங்கினர். ஒரு விளை பயிர் எவ்வளவு விளைச்சல் கொடுக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு இளம் ஆய்வாளர்களின் தேடல்களும் விரிவடைந்தன. தொழில்நுட்பம் தயாரானது. அந்தத் தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதிக்க பல நாடுகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் தரவுகள் மூலம் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்களின் கண்டுபிடிப்பு சரியாக உள்ளதை உணர்ந்தனர். அதாவது முளைத்த பயிர் எந்தக் காலக்கட்டத்தில் நோய் தாக்குதல் ஏற்படும், அந்த நோயைத் தடுக்கும் வகையில் தெளிக்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள், இறுதியில் எவ்வளவு விளைச்சல் கொடுக்கும், விளைச்சலை அதிகரிக்க என்ன மாதிரியான நுண்ணூட்டங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் துல்லியமாகக் கூறும் வகையில் அமைந்துள்ளது. பல கட்ட சோதனைகளில் 98% சரியான முடிவுகளைக் கொடுத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்து காப்புரிமையும் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ள பேராவூரணி ஆதனூர் வேத கரம்சந்த் காந்தி நம்மிடம், “சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினி சயின்ஸ் ஆய்வு மாணவர்களாக ஒன்று சேர்ந்த நாங்கள் 8 பேரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்க நினைத்தோம். அதன்படி எங்கள் தேடல்கள் அதிகமாயின.
விவசாயிகள் கடன் வாங்கி விதை வாங்கி பயிர் செய்து குறிப்பிட்ட நாளில் நோய் தாக்கி மொத்த விவசாயமும் அழிந்து கடன் மேல் கடன் சுமந்து நிற்கும் விவசாயிகளைப் பார்க்கிறோம். பல விவசாயிகள் உயிரிழப்புக்கு ஆளானது எங்கள் மனதை உருக்கியது. இந்த நிலையில் தான் நெல், சோளம், உளுந்து போன்ற திணைப் பயிர்கள் முளைத்து சில நாட்களில் அதனைப் படங்கள் எடுத்து நாங்கள் வடிவமைத்துள்ள செயற்கை நுண்ணறிவிற்குள் (ஏஐ) பதிவேற்றம் செய்யும்போது அந்தப் பயிர்களை நன்றாக ஆய்வு செய்து அந்தப் பயிருக்கு இத்தனை நாளில் நோய் தாக்குதல் ஏற்படும். அந்த நோயில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பரிந்துரை செய்கிறது. அதேபோல அந்தப் பயிர் எவ்வளவு விளைச்சல் கொடுக்கும் என்பதைத் துல்லியமாகக் கொடுக்கிறது. மேலும் விளைச்சலை அதிகரிக்க என்ன வகையான நுண்ணூட்டங்கள் பயன்படுத்தலாம் என்பது வரை கூறுகிறது.
இதனை 10 லட்சம் தரவுகளின் அடிப்படையில் பல முறை சோதனைகள் செய்து பார்த்தபோது 98% சரியான முடிவைச் சொல்கிறது என்பதை உறுதி செய்து கொண்டோம். அதன் பிறகே காப்புரிமைக்காக விண்ணப்பித்தோம். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு எங்களுக்கு காப்புரிமை கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் குழுவின் உழைப்பு வீண்போகவில்லை. இதனை விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கிறோம்.
அதேபோல, அடுத்த கட்டமாக விதை ஆய்வுக்கு தயாராகி அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. அதாவது, இப்போது பயிர்களை வைத்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோய் தாக்குதல், விளைச்சலை கணித்தோம். இனிமேல் விதையிலேயே அதன் தரம், விளைச்சல் போன்றவற்றை கண்டறியும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் முயற்சியிலும், தென்னை போன்ற நீண்ட கால பயிர்களின் ஆய்வுகளும் எங்களிடம் உள்ளன. விரைவில் அதற்கும் காப்புரிமை பெறுவோம்.
அதேபோல நமது பாரம்பரிய நெல் போன்ற விளைப் பொருட்களை மீட்க அதற்கான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. அதேபோல நோய் தாக்குதல் ஏற்படும் பயிர்களைக் காப்பாற்ற ரசாயனக் கலவை இல்லாத பாரம்பரிய பூச்சிவிரட்டி நுண்ணூட்டங்களைப் பயன்படுத்துவது குறித்தும் எங்கள் ஆய்வுகள் தொடர்கின்றன” என்றார்.