தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல் சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவால் இன்றுடன் (31.08.2025) பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். காவல் கண்காணிப்பாளராக பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், மதுரை மாநகர சட்டம் ஒழுங்கில் காவல் துணை ஆணையராகவும் மற்றும் மத்தியப் புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மேலும், காவல் துணைத் தலைவராக சேலம் சரகத்திலும் மற்றும் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையிலும் பணியாற்றினார். 

Advertisment

அதோடு காவல்துறை தலைவராக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையிலும் பணிபுரிந்துள்ளார். மேலும் காவல்துறை கூடுதல் இயக்குநராக சைபர் குற்றப் பிரிவிலும் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையிலும் பணிபுரிந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவல் தலைவர், காவல் கூடுதல் இயக்குநர் மற்றும் காவல் இயக்குநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில் காவல்துறை தலைமையகத்தில் தமிழக டிஜிபியாக பதவி வகித்த சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் ஜி. வெங்கட்ராமனிடம் இன்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். 

அதனைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் டிஜிபி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக டிஜிபியாக பதவி வகித்து  வந்த சங்கர் ஜிவாலின் கடைசி பணி நாள் கடந்த 29ஆம் தேதி (29.08.2025) ஆகும். எனவே அன்று மாலை அவருக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணைய (Fire Commission) தலைவராகப் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதையொட்டியும், தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.