நாடாளுமன்ற குழுக்களில் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்தவரையில் நாடாளுமன்ற நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழு, வேளாண் விவகாரங்களுக்கான நிலைக்குழு செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் சிறந்த செயல்பாடு, நிலையான வருகை, நாடாளுமன்ற விவாதங்களில் பங்களிப்பை வழங்கும் உறுப்பினர்களின் பங்களிப்பை அங்கீகரித்து வருகிறது ஒன்றிய அரசு. நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ஒன்றிய அரசின் சார்பில், ஆண்டுதோறும் ‘சன்சத் ரத்னா’ என்ற பெயரில் விருது வழங்கி அந்த உறுப்பினரை பெருமைப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் தலைமையிலான நடுவர் குழுவால் விருதுக்கு தகுதியான நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து 17 உறுப்பினர்கள், 2 நிலைக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிநபர் பிரிவின் கீழ் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரான சி.என். அண்ணாதுரைக்கு அவ்விருதுக்கு தேர்வு செய்து கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பி ஒருவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த விருது வழங்கும் விழா டெல்லியில் 2025 ஜூலை 26ஆம் தேதி நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

Advertisment

அதேபோல், 16 மற்றும் 17-வது மக்களவை பதவி காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரளாவின் ஆர்எஸ்பி கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன், மகாராஷ்டிராவின் என்சிபி கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீரங் அப்பா பார்னே ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த ஸ்மிதா வாக், மேதா குல்கர்னி, பிரவீன் படேல், ரவி கிஷன், நிஷிகாந்த் துபே, பி.பி. சவுத்ரி, மதன் ரத்தோர் மற்றும் திலீப் சைகியா ஆகியோருக்கும், சிவசேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் மற்றும் நரேஷ் கண்பத் மாஸ்கே ஆகியோருக்கும், காங்கிரஸைச் சேர்ந்த வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் திமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள சி.என்.அண்ணாதுரை. தென்னிந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கி தென்னிந்தியாவில் சிறந்த எம்.பி என்கிற பெயரை ஏற்கனவே இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.