தமிழ்நாட்டில் மாங்காய் விவசாயம் என்பது தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தேனி, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் தான் அதிகம். தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் மாந்தோப்புகள் உள்ளன. அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் விளைச்சல் நடக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்யும் மாங்காய்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மாகூழ் தொழிற்சாலைகளுக்கும், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது.

கடந்தாண்டு ஒரு டன் மாங்காய் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகமானதால் ஒருடன் மாங்காய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரையே விற்பனையாகி வருகிறது. அதாவது ஒருகிலோ மாங்காய் 3 முதல் 4 ரூபாய் வரையே விற்கப்படுகிறது.

5 ஏக்கர் தோப்புக்கு மருந்து அடிச்சது 60 ஆயிரம், உழவு அடிச்சது 40 ஆயிரம் செலவு. மாங்காய் பறிப்பு கூலி கிலோவுக்கு 1 ரூபாய், டிரான்ஸ்போர்ட் கூலி 1 ரூபாய், மண்டியில் ஒரு டன்னுக்கு சூட்டு (கழிவு) 100 கிலோ, வியாபாரிக்கு நூற்றுக்கு பத்து ரூபா கமிஷன், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி எல்லாம் தந்தது போக விளைவச்ச எனக்கு ஒரு ரூபாய் கூட லாபம் கிடைக்கல. மத்த பயிர் போல் அடுத்த அறுவடையில் பார்த்துக்கலாம்னு நினைக்க முடியாது, ஆண்டுக்கு ஒரு முறை தான் விளைச்சலே, மனவேதனையா இருக்கு என்கிறார்கள்.

கடந்தாண்டைவிட இந்தாண்டு பத்து மடங்கு விலை குறைந்து 3 ருபாய்க்கு மாங்காய் வாங்காரணம் விளைச்சல் அதிகம் என காரணம் சொல்லப்பட்டாலும் அது உண்மையில்லை. மா கூழ் கம்பெனிகளின் சதியே முக்கிய காரணம். கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் 49 கம்பெனிகள், ஆந்திரா மாநிலம் சித்தூரில் 50 கம்பெனிகள் உள்ளன. உற்பத்தியாகும் 90 சதவித மாம்பழங்கள் இந்த கம்பெனிகளுக்கு தான் வியாபாரிகள், விவசாயிகள் ஏற்றி அனுப்புகிறார்கள். இந்த கம்பெனிகள் கடந்தாண்டு அதிக விலை கொடுத்து மாங்காய் வாங்கினோம் அதனால் எங்களுக்கு நட்டம் வந்துவிட்டது எனச்சொல்லி இந்தாண்டு சிண்டிகேட் அமைத்து இந்த விலைக்கு மேல் மாங்காய் வாங்க கூடாது என முடிவு செய்து 3 முதல் 5 ரூபாய்க்கே வாங்குகிறார்கள். நாங்கள் அந்த விலைக்கு தர முடியாது எனச் சொல்ல முடியாது, அதனால் வந்த விலைக்கு விற்கிறோம்.

Advertisment

ஆந்திராவிலும் கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்ததால் ஒருகிலோ மாங்காய் 4 முதல் 6 ரூபாய்க்கே வாங்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் மாநில அரசு மா விவசாயிகளுக்கு கிலோவுக்கு 4 ரூபாய் மானியம் தருகிறது. அதேபோல் மா கூழ் கம்பெனிகள் 4 ரூபாய் கிலோவுக்கு கூடுதலாக தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ 12 முதல் 15 வரை விலை கிடைக்கிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் செய்யவேண்டும் என்கிறார்கள் தமிழக விவசாயிகள். மேலும் தமிழ்நாடு அரசு மாங்காய் விவசாயத்துக்கு மானியம் வழங்கவேண்டும், நெல், கரும்பு, பருத்தி, கோதுமைக்கு ஆதாரவிலை அரசுகள் தருவதுப்போல் மாங்காய்க்கும் விலை நிர்ணயிக்க வேண்டும், இந்தாண்டு மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நட்டயீடாக ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடையடைப்பு நடத்தி வியாபாரிகளும் வேலூர், கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தினார்கள்.

வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தில் விளையும் மாங்காய்கள் வழக்கமாக சித்தூர் மாவட்டத்திலுள்ள மாங்காய் மண்டிக்கும், தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் அனுப்புவார்கள். இந்தாண்டு அங்கே அதிக விளைச்சல் அதிகமாகியுள்ளது, விலையும் குறைவு. அதனால் தமிழ்நாட்டு மாங்காய்கள் ஆந்திராவுக்குள் வந்தால் இன்னும் எங்களுக்கு விலை குறையும் என ஆந்திரா விவசாயிகள் பிரச்சனை செய்து போராட்டம் நடத்துவதால் தமிழகத்திலிருந்து மாங்காய் லோடோடு சென்ற நூற்றுக்கணக்கான லாரிகளை திருப்பி அனுப்பும் வகையில் ஆந்திரா அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கம்பெனிகளிடம் தமிழ்நாட்டு மாங்காய் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளனர். இதனால் பெரிய அளவில் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மா விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நட்டயீடு தரவேண்டும். அதனால் ஒன்றியரசின் நிதி 50 சதவீதம், மாநில அரசின் நிதி 50 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கலாம் என கடிதம் எழுதியும் இன்னும் பாஜக மோடி அரசு எந்த பதிலும் தரவில்லை' என கண்ணீரில் உள்ளனர் ஆயிரக்கணக்கான மா விவசாயிகள்.