தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், ஆண்டுதோறும் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினால் மட்டுமே பதவி உயர்வு என்ற நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 500-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட வேண்டும் எனவும், ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு 30 பேருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டு, மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்புகளைப் புறக்கணித்து, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அதற்குக் காரணமாக ஆராய்ச்சிக் கட்டுரை இல்லை எனச் சொல்லப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கட்டுரை தாக்கல் செய்வது இயலாத காரியம் எனவும் உதவிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் பல்வேறு பணிகளைப் பார்த்துக்கொண்டே, ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொடுப்பது கடினமான விஷயம் எனவும், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பேராசிரியர்களுக்கான தகுதி நிர்ணயம் செய்ய, UGC, ICAR விதிமுறைகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் பின்பற்றவில்லை எனவும், இந்தியாவில் உள்ள 63 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன எனவும், இதில் ஒன்றில் கூட இதுபோன்ற விதிமுறைகள் இல்லை எனவும் தெரிவித்தனர். ஆண்டுதோறும் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற விதிமுறை சரியானது இல்லை எனவும், இதைத் தமிழக அரசு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்கப்பட வேண்டும், ஏற்கனவே போடப்பட்ட பட்டியலை ரத்து செய்து, ஒரே பட்டியலாக வழங்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. பதவி உயர்வுக்கான ஸ்கோர்கார்டு முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஆராய்ச்சிக் கட்டுரை இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதில்லை எனவும், மதிப்பெண்கள் வழங்கும் ஆசிரியர்களே மதிப்பெண்ணுக்கு காத்திருக்கும் நிலை இருப்பதாகவும், இதைத் தமிழக அரசு கருத்தில் கொண்டு, பணிபுரியும் பேராசிரியர்களுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.