திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஒண்டிக்குப்பம் என்ற இடத்தில் கஞ்சா போதையில் அதிவேகத்தில் இரு சக்கர ஊர்திகளை ஓட்டிச் சென்ற 4 பேர் கொண்ட கும்பல், அதைத் தட்டிக் கேட்ட இரு இளைஞர்களை கற்களால் அடித்து கொலை செய்திருக்கிறது. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

சென்னை &- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 4 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் இருசக்கர ஊர்திகளில் வேகமாக சென்றுள்ளனர். அதை அந்தப் பகுதியைச் சேர்ந்த  பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகிய இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த நால்வரும் அந்த இளைஞர்களை அடித்து உதைத்ததுடன், கற்களை போட்டுத் தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன், சுகுமார் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். கேசவமூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடிய நிகழ்வுக்கு முதன்மைக் காரணம் கஞ்சா போதை தான். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா போதை தலைவிரித்தாடுகிறது.  குறிப்பாக  திருவள்ளூர் மாவட்டம்  தமிழ்நாட்டின் கஞ்சா நுழைவாயிலாக திகழ்கிறது. சில நாள்களுக்கு முன் திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் வட இந்திய இளைஞரை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிய நிகழ்வு பார்ப்போரின் நெஞ்சங்களை பதற வைத்தது.  அதற்கு அடுத்த நாளே, அதே தொடர்வண்டி நிலையத்தில் புடவை வணிகர் ஒருவரை  கஞ்சா போதையில் வந்த சிலர் கொடூரமாக தாக்கினர். அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே இரு படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

Advertisment

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருள்களும் தடையில்லாமல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளன.  போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் ஆளும் திமுகவின் ஆதரவு பெற்றவர்களாக இருப்பதால்  அவர்கள் மீது எந்த காவல்துறையினர் நடவடிக்கையும் எடுப்பதில்லை. கஞ்சா போதை சீரழிவால் யாருடைய உயிரிக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.

கஞ்சா போதையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரிலும், அறிக்கைகள் வாயிலாகவும், போராட்டங்களின் மூலமாகவும் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. கஞ்சா போதையைத் தடுக்கத் தவறிய திமுக அரசு தான் இரு இளைஞர்களின் படுகொலைக்கு  பொறுப்பேற்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த இளைஞர் நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கஞ்சா போதை மிருகங்களால் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த இளைஞர் கேசவமூர்த்தி தரமான மருத்துவம் வழங்குவதுடன் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கொலைகளுக்கு காரணமான மிருகங்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.